

திண்டுக்கல் நகர் கிழக்கு கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் பரணிவளவன்(33). இவரது சொந்த ஊர் காரைக்குடி. இவர் உட்பட 7 பேர் கடந்த செப்டம்பர் மாதம் ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி வந்தனர். தங்கம்மாபட்டி சோதனைச் சாவடியில் பரணிவளவன் மட்டும் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சுமார் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர், அக்டோபர் மாதம் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அவர் தங்கியிருந்த விசாரணை கைதிக்கான அறையில் நேற்று அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த சிறைக் காவலர்கள் அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், ‘குடும்பச் சூழல் காரணமாக இந்த முடிவை எடுக்கிறேன். மேலும் என்னை யாரும் ஜாமீனில் எடுக்க முன்வராததால் தற்கொலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்’ என சிறைத் துறையினர் தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.