

சேலத்தில் கரோனா வைரஸ் தொற்றுபரவலை தடுக்க தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித் துள்ளார்.
சேலம் அஸ்தம்பட்டி பயணியர் ஆய்வு மாளிகையில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான கூட்டம் ஆட்சியர் ராமன் தலைமையில் நடந்தது. இதில், முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு மாவட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சி திட்டங்கள், சுகாதார பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. சில மாவட்டங்களில் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் கரோனா தொற்று பரவி வரும் சூழலும் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 30,006 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதில், 29,587 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 99 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 449 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 511 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 2,500 கரோனா பரிசோதனை முகாம்களில் மொத்தம் 5,29,387 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, 39,312 காய்ச்சல் பரிசோதனை முகாமில், 14,93,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மேட்டூர், சேலம் மாநகரம் கரோனா கட்டுப்பாடு பகுதிகளாக உள்ளது. தொடர்ந்து கரோனா தொற்று பரிசோதனை செய்து, கரோனா பரவலை தடுக்க தீவிர கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, சேலம் மாநகரில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 12 வார்டுகளுக்கு வாரம் ஒரு முறையும், 48 வார்டுகளில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2,12,232 பேரிடம் முதியோர் உதவித் தொகைக்கான விண்ணப்பம் பெற்று, புதியதாக 74,625 பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் நடப்பாண்டு 26 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ-க்கள், கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் சேலம் மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் பொன்னையன், எம்எல்ஏ-க்கள் செம்மலை, சக்திவேல், வெங்கடாசலம், வெற்றிவேல், மருதமுத்து, சின்னதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.