

மதுரையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்கும் முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணித் தொடக்க விழா ஏற்பாடுகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறியதாவது:
மதுரையில் டிச.4-ல் (நாளை) முதல்வர் பழனிசாமி தொடங்கிவைக்க உள்ள முல் லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் மதுரை மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலை ஏற்படும்.
மதுரை மாவட்ட வளர்ச்சிக்காக ரூ.1295 கோடியில் தொடங்கவுள்ள முல்லை பெரியாறு குடிநீர்த் திட்டத்தைப் போன்று இதுவரை எந்த முதல்வரும் எந்தக் காலத்திலும் மதுரைக்கு வழங்கியதே கிடையாது, என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள் அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்டபோது இது அரசு நிகழ்ச்சி, ஆகவே இங்கு அரசியல் கேள்விகள் வேண்டாம் என்று தெரிவித்த அமைச்சர், ஆளும் கட்சி சார்பாக முதல்வரை வரவேற்றுப் பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரத்தை அந்த இடத்திலேயே விநியோகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.