

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘புரெவி' புயல் கரையைக் கடக்க உள்ளதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே பரவலாக கனமழை பெய்தது. பிற பகுதிகளைவிட கடலோரப் பகுதிகளான மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், நாகுடி, மீமிசல், புதுக்குடி, கட்டுமாவடி, அரசங்கரை போன்ற பகுதியில் கூடுதலாக மழை பெய்தது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதுதொடர்பாக, ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கனமழை பெய்து வருவதால் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை மரங்கள் மற்றும் மின்கம்பங்களில் கட்டிவைக்கக்கூடாது.
கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 130 பேரைக் கொண்ட 13 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. புயல், மழை பாதிப்பு குறித்து 1077 மற்றும் 04322 222207 ஆகிய எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.