Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

நெல்லை மாவட்ட ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்க உத்தரவு வெள்ளம் பாதித்த மக்களை தங்க வைக்க 200 மையங்கள்

புயல் எச்சரிக்கையை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசிய பொருட்களை முழு அளவில் இருப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறப்பு அதிகாரி கருணாகரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யவும் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி கருணாகரன், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அனைத்துத் துறை அதிகாரி களுடன் நேற்று ஆலோசனை மேற் கொண்டார். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.

மையங்கள் தயார்

கூட்டத்துக்கு பின் செய்தியாளர் களிடம் கருணாகரன் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 87 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் 11 இடங்கள் மிகவும் தாழ்வானவை, 11 இடங்கள் மிக அதிக பாதிப்புக்குள்ளாக கூடியவை, 32 இடங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாக கூடியவை, 13 இடங்கள் மிதமான பாதிப்புக்கு உள்ளாக கூடியவை, 31 இடங்கள் லேசான பாதிப்புக்கு உள்ளாக கூடியவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.

மழை, வெள்ள பாதிப்பிலிருந்து மீட்கப்படும் மக்களை தங்கவைக்க 188 இடங்களும், 7 பல்நோக்கு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. கடலோர பகுதிகளில் உள்ள பல்நோக்கு மையங்களில் 8 ஆயிரம் பேர், மற்ற மையங்களில் 50 ஆயிரம் பேரை தங்க வைக்க முடியும். இம்மையங்களில் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருந்துகள் இருப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் புயல் பாது காப்பு மையங்கள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு, எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் உள்ளன. இம்மையங்களில் மருத்துவ வசதி, குடிநீர், உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையின் 3 குழுவினர் திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், கடலோர கிராமங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேவை யான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளது. தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

பயிர் பாதுகாப்புக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சேதம் ஏற்பட்டால் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வருவாய்த்துறை, வேளா ண்மைத்துறைக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

அணைகள் கண்காணிப்பு

பாபநாசம், மணிமுத் தாறு அணைகளை பொதுப்பணித் துறையினர் கண்காணித்து வருகின்றனர். பெரிய மற்றும் சிறிய குளங்கள் அனைத்தும் நிரம்பவும், நிரம்பியபின் வடிகால் மூலம் தண்ணீரை வெளியேற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித்துறை மூலம் அனைத்து குளங்களும் ஏற்கெனவே தூர்வாரப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முழுஅளவில் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கூட்டத்துக்கு பின் நாங்குநேரி பெரியகுளம், விஜயநாராயணம் குளம் மற்றும் கூட்டப்புளி நிவாரண முகாம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை

தென்காசி மாவட்டத்தில், ‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் தலைமை வகித்தார். ஆட்சியர் சமீரன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் கூறும்போது, “தென்காசி மாவட்டத்துக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் சூழும் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 15 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் தென்னை மரங்கள் உள்ளன. அவைகளை காப்பீடு செய்வது உள்ளிட்ட அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்துக்கு பேரிடர் மீட்புக்குழு உதவி தேவைப்பட்டால் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப்படும்” என்றார்.

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்துக்கு மேல் ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x