

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து சில தினங்களுக்கு முன்னர் 100 அடியை எட்டியது.
கடந்த ஜூன் 12-ம் தேதி அணை நீர்மட்டம் 101 அடியாக இருந்த நிலையில், 170 நாட்களுக்கு பின்னர் மீண்டும் நேற்று 101 அடியை எட்டியது. நேற்று முன் தினம் 100.93 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 101.27 கன அடியானது. நேற்று முன்தினம் விநாடிக்கு 7,126 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6,559 கனஅடியாக குறைந்தது.
டெல்டா மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில், பாசனத்துக்கு நீர் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து, குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 66.49 டிஎம்சி-யாக உள்ளது.