

ஈரோடு வைராபாளையத்தைச் சேர்ந்த மீனவர் வசந்தகுமார் (32). இவர் வைராபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை பரிசல் மூலம் மீன்பிடிக்கச் சென்றார். பரிசலில் இருந்தபடி, டெட்டனேட்டர்களைப் பற்றவைத்து, காவிரி நீரில் வீசி மீன்களைப் பிடித்தார்.
அப்போது ஒரு டெட்டனேட்டரைப் பற்றவைத்து வீசும்போது, எதிர்பாராத விதமாக கையிலேயே வெடித்தது. இதில் வசந்தகுமாரின் இரு கைகளின் விரல்களும் துண்டானது. அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெட்டனேட்டரை வீசி மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை முடிந்ததும், வசந்தகுமார் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.