

சேலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம் மகுடஞ்சாவடி மற்றும் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ராமன் ஆய்வு மேற்கொண்டார். மகுடஞ்சாவடி ஒன்றியம் அ.புதூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.3.71 கோடி மதிப்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி மற்றும் கண்டர்குல மாணிக்கம் ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை பார்வையிட்ட ஆட்சியர் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிடவும் குடிநீர், கழிப்பிடம், தெரு விளக்கு, சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் டெங்கு தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, காளிகவுண்டம் பாளையம் ஊராட்சி, ஊஞ்சக்காடு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடம், அ.புதூர் ஊராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் மகளிர் சுய உதவிக் குழு கட்டிடம் உள்ளிட்டவைகளை ஆட்சியர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) செல்வகுமார், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கரட்டூர் மணி, உதவி செயற்பொறியாளர் அருள், சங்ககிரி வட்ட வழங்கல் அலுவலர் சிவராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.