

சேலம் கொண்டலாம்பட்டி அருகே கார் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பழுது நீக்கம் செய்ய நிறுத்தப்பட்டிருந்த இரு கார்கள் தீயில் எரிந்து சேதமானது.
சேலம் கொண்டலாம்பட்டி அடுத்த அமானி கொண்டலாம்பட்டியில் தனபால் என்பவருக்கு சொந்தமான கார் மற்றும் லாரி பழுது நீக்கும் பட்டறை உள்ளது. இந்த பட்டறைக்கு அடுத்தடுத்து, மேலும் சில பட்டறைகள், பஞ்சர் ஒட்டும் கடைகள் உள்ளன.
நேற்று அதிகாலை தனபாலின் பட்டறை தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து அங்கு சென்ற செவ்வாய்பேட்டை மற்றும் சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக தீயணைப்பு வீரர்கள் கூறும்போது, “பட்டறையில் இருந்த பழுதடைந்த இரு கார்கள், பஞ்சர் கடையில் இருந்த டயர்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன” என்றனர்.