

சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய இன்று (30-ம் தேதி) கடைசி நாளாகும். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காடையாம்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காடையாம்பட்டி வட்டாரத்தில் சுமார் 450 ஹெக்டரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக நெற்பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளன. இயற்கை இடர்பாடுகளால் பயிர்கள் சேதமடைந்து இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய பிரதமர் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சம்பா நெற்பயிருக்கு ஒரு ஏக்கர் பிரிமியம் ரூ.494 தொகையுடன் போட்டோ, ஆதார் நகல், கணினி பட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு எண் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், பொது சேவை மையத்தை அணுகி காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
காப்பீடு செய்ய இன்று (30-ம் தேதி) கடைசி நாளாகும் என்று தெரிவித்துள்ளார்.