

மத்திய சுற்றுலா துறை தொடங்கியுள்ள இணையதளத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளை பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய சுற்றுலா துறை சார்பில் இந்திய அளவில் அனைத்து தங்கும் விடுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய இணையதளம் www.nidhi.nic.in தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளை பதிவு செய்து சுய சான்றிதழ், சுய பங்கேற்பு சான்றிதழ், சுய மதிப்பீட்டு சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர கரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வு பயிற்சி தரும் வகையில் www.saathi.qcin.org என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், இந்த இணையதளத்தில் பதிவு செய்து தரம் மற்றும் வணிக மேம்பாடு உள்ளிட்ட ஆதாரங்களை பெற்றுபயன்பெறலாம்.
முதல் இணையதள முகவரியில் தங்களது விடுதியைப் பற்றி கேட்கும் விவரங்களை பதிவேற்றம் செய்தால், விடுதிக்கான பதிவேற்ற எண் கிடைக்கும். இரண்டாவது இணையதள முகவரிக்குச் சென்று பதிவேற்ற எண்ணை (NIDHI Registration No.) பதிவு செய்தால், விடுதி பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான சுயசான்றிதழை பெறலாம், இந்த இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சுயசான்றிதழை, சேலம் மாவட்ட சுற்றுலா அலுவலக இமெயில் touristofficeslm@gmail.com முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு சுற்றுலா அலுவலகம், சேலம் 0427-2416449 தொலைபேசி மற்றும் 8939896397 செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.