கன மழை எச்சரிக்கைக்கு பின்னரும் தூத்துக்குடியில் கரை திரும்பாத 46 விசைப்படகுகள் மீனவ பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

கன மழை எச்சரிக்கைக்கு பின்னரும் தூத்துக்குடியில் கரை திரும்பாத 46 விசைப்படகுகள்  மீனவ பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆலோசனை
Updated on
1 min read

கன மழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த 46 விசைப்படகுகள் இன்னும் கரை திரும்பவில்லை. விரைவாக கரை திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு மீனவ பிரதிநிதிகளிடம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேரில் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருவைகுளம் ஆழ்கடல் மீன்பிடி படகு சங்க பிரதிநிதிகளுடன் ஆட்சியர் நேற்று கலந்துரையாடினார். அப்போது 2 நாள் கனமழை இருப்பதால் ஆழ்கடல் பகுதியில் உள்ள தருவைகுளத்தை சேர்ந்த 46 படகுகளை இன்றைக்குள் உடனடியாக கரை திரும்ப நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பாக நிறுத்துமாறு ஆட்சியர் அறிவுறுத் தினார். மேலும் செல்போன் செயலி மூலம் 2 நாள் கனமழை இருப்பது தொடர்பாக வரைப்படப் பகுதியை மீனவ பிரதிநிதிகளுக்கு காண்பித்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது:

தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக டிசம்பர் 3-ம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல், கேரளம், மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து கடலோர மீனவ கிராமங்களுக்கும் புயல் தொடர்பான எச்சரிக்கை செய்தி வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 29.11.2020-க்கு பிறகு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், தங்கள் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆழ்கடல் விசைப்படகுகளும் உடனே கரை திரும்ப அவற்றுக்கு கொடுக்கப் பட்டுள்ள செயற்கைகோள் தொலைபேசிகளின் வழியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மீன்வளத்துறை) தீபா, மீன்பிடி துறைமுகம் உதவி இயக்குநர் வயலா மற்றும் தருவைக்குளம் ஆழ்கடல் மீன்பிடி படகு சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in