

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2021 கையெழுத்து விழிப்புணர்வு இயக்கத்தை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
பொதுமக்களிடையே வாக் காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் - 2021 விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நேற்று சேலம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சேலம் தெற்கு தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கையெழுத்து விழிப்புணர்வு பேரியக்கத்தின் பலகையில் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வூட்டும் பணியினை மேற்கொண்ட ஆணையர் ரவிச்சந்திரன் கூறியது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த இரண்டாவது முகாம் வரும் டிசம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு திருத்த முகாம்களை 01.01.2021 அன்று 18 வயது நிரம்ப பெறும் இளையோர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்ய, வயது சான்றாக பிறப்பு சான்று, பள்ளி மாற்றுச் சான்று, மதிப்பெண் சான்று இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் மற்றும் முகவரி சான்றாக ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்ட், ஓட்டுநர் உரிமம், கடவுசீட்டு இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் இணைத்து விண்ணப்படிவங்களை வாக்குச்சாவடி மையங்களில் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம் செய்தல் ஆகிய பணிகள் முகாம்களில் ஒருங்கிணைந்து தங்களது பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளிலேயே நடைபெறுவதால் பொதுமக்கள் முகாம்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் சரவணன், ராம்மோகன், ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.