மலைக் கிராமங்களுக்கு அடிப்படை வசதி ஆட்சியரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்துள்ள 18 மலை கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், ஈரோடு ஆட்சியர் கதிரவனிடம் அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங் கலத்தை அடுத்த கடம்பூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் குன்றி, அணில்நத்தம், பெரிய குன்றி, பண்ணைத்தூர், கீளூர், நல்லூர் உள்ளிட்ட 18 மலைக் கிராமங்களில் 7500 பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் செல்போன் டவர் இல்லாத காரணத்தால், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட போனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இக்கிராம மக்களுக்கு தொலைபேசி வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கிராமங்களில் மைய கிராமம் ஒன்றில், 108 ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
வாகனங்கள் சென்று வரும் வகையில் சாலைகளை மேம்படுத்தி, போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், நூலகம் அமைத்துத் தர வேண்டும், எனத் தெரிவித்துள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் கதிரவன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
