Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கலை கைவிட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கலை கைவிட வலியுறுத்தி ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நேற்று அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழிற் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தொழிற்சங்க தலைவர்கள் ச.பழனியப்பன், பி.தனசேகரன், கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும், வருமானவரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வீதம் கரோனா கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மேலும், பேருந்து நிலையம் எதிரே திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதுபோல் திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர். இதன்படி மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கத்தினரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தி, அந்தியூர், கொடுமுடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட வட்டத் தலைநகரங்களில் மத்திய தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 342 பேரை காவல் துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர். இதனிடையே பொது வேலைநிறுத்த போராட்டத்தில் ஒரு சில வங்கி ஊழியர்களும் பங்கேற்றனர். இதனால் வங்கிகளில் பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

தருமபுரியில் போராட்டம்

தருமபுரி மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோன்று, விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் டில்லிபாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனன், அகில இந்திய விவசாயிகள் சங்க மகாசபை நிர்வாகி கோவிந்தராஜன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல செயலாளர் முத்துகுமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இதே போல் பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று மழையால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டு, கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

ஓசூரில் ஆர்ப்பாட்டம்

ஓசூரில் ஐஎன்டியுசி, சிஐடியு, தொமுச, அங்கன்வாடி ஊழியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஐஎன்டியுசி மாநில தலைவர் கே.ஏ.மனோகரன் தலைமை தாங்கினார். தொமுச மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் தர், பொருளாளர் பீட்டர், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் கோவிந்தம்மா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x