மதுரை விமான ஓடுதளத்தின் கீழே சாலை திட்டத்துக்கு ஒப்புதல் மறுப்பு தமிழக அரசு தலையிட தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்
மதுரை விமான நிலையத்தில் ஓடுதளத்தின் கீழே சாலை அமைக்கும் திட்டத்துக்கு ஆணையம் ஒப்புதல் வழங்காத நிலையில், தமிழக அரசு அழுத்தம் கொடுத்து திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தி உள்ளது.
மதுரை விமான நிலையம் 17,000 சதுர மீட்டரில் அமைந் துள்ளது. மாதம்தோறும் 1.25 லட்சம் பயணிகள் வந்து செல் கின்றனர். 7,500 அடி நீள ஓடு பாதையை 12,500 அடியாக விரிவாக்கம் செய்யும் பணி 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக 615 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நில உரிமையாளர்களுக்கு ரூ.166 கோடி வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது. ஓடுதள விரிவாக்கம் நான்குவழிச் சாலையை கடந்துதான் மேற் கொள்ள வேண்டி உள்ளது.
வாரணாசி விமான நிலையம் போல் மேலே ஓடுதளம், கீழே சாலை அமைக்கத் திட்ட மிடப்பட்டது. மைசூரிலும் இதேபோல அமைக்கப்பட்டு சிறப்பாகச் செயல்படுகிறது.
மதுரை ஓடுதளம் குறித்த திட்ட அறிக்கை விமான போக்கு வரத்து ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. இதை ஆணையம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் கூறியதாவது:
கீழே சாலை, மேலே விமான ஓடுதளம் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.250 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய சுற்றுச்சாலை அமைத்து போக்குவரத்தை மாற்றிவிட்டால் ரூ.100 கோடியில் பணிகளை முடிக்கலாம் எனக் கருதி திட்டத்தை ஆணையம் அங்கீகரிக் கவில்லை எனத் தெரிகிறது.
சுற்றுச்சாலையை புதிதாக அமைக்க கூடுதல் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகலாம். இதனால் தென் மாவட்ட தொழில் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
எனவே விமான ஓடு தளத்தின் கீழே சாலை அமைக்க ஆணையம் ஒப்புதல் வழங்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். இத்திட்டத்துக்கான கூடுதல் செலவை தமிழக அரசே ஏற்பதாக அறிவித்து, பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
