

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே ஆட்சியர் காரை மறித்து வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
காளையார்கோவில் அருகே காஞ்சிப்பட்டி ஊராட்சி ஒருப்போக்கி கிராமத்தில் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனை ஊரகவளர்ச்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் சரி செய்து வருகின்றனர். அதனை மாவட்ட ஆட்சியர் நேற்று பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அவர் மறவமங்கலம் பகுதிக்குச் சென்றபோது, கிராம மக்கள் அவரது காரை மறித்து வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து புகார் தெரிவித்தனர்.
இதுபற்றி கிராம மக்கள் கூறியதாவது: பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள மறவமங்கலம் பெரிய கண்மாய் மூலம் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சமீபத்தில் குடிமராமத்துத் திட்டத்தில் கண்மாய் சீரமைக்கப்பட்டது. ஆனால் வரத்துக்கால்வாயை சீரமைக்க வில்லை. வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளதால் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. மேலும் நாச்சியாரேந்தல், சூரன்குண்டு கண்மாய்கள் மூலம் 200 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன. இந்தக் கண்மாய்களில் உள்ள 5 மடைகளும் சேத மடைந்துள்ளன. இதனால் தண்ணீர் தேங்காமல் வெளியேறி வருவதால் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் இக்கண்மாய்களுக்குரிய வரத்துக் கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் வரத்துக்கால்வாய், மடைகளை சீரமைக்க வேண்டும், என்றனர்.
இதையடுத்து கிராம மக்களின் புகாரை நிவர்த்தி செய்ய பொதுப் பணி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.