

தண்டவாளத்தில் கிடந்த பாறை மீது மோதி விபத்து நேரிடாமல் தவிர்த்த ரயில் ஓட்டுநர்கள் இரண்டு பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
திண்டுக்கல் அருகே கொடை ரோடு ரயில் நிலையத்தில் இருந்து அம்பாத்துறை வரை மூன்று கி.மீ.க்கு மலையைக் குடைந்து ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் 350 மீ. நீளத்துக்கு தடுப்புச் சுவரும் கட்டப் பட்டுள்ளது. இப்பாதையில் 2 ஊழியர்கள் 24 மணி நேரமும் நடந்து சென்று கண்காணிக்கின்றனர்.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி கொடை ரோடு-அம்பாத்துறை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தில் கடந்த புதன்கிழமை பாறைகள் உருண்டு விழுந்தன. இதைக் கவனித்த வைகை சிறப்பு ரயில் ஓட்டுநர் ஜே.சுரேஷ், உதவி ஓட்டுநர் பி.சுரேஷ்பாபு ஆகியோர் உடனடியாக ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தனர்.
அவர்களது சிறப்பான பணியைப் பாராட்டி மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின் இருவருக்கும் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார்.