Published : 26 Nov 2020 03:18 AM
Last Updated : 26 Nov 2020 03:18 AM

மழைக்காலத்தில் பயிர்களை பராமரிக்கும் முறை

மழைக் காலத்தில் பயிர்களை பராமரிக்கும் முறை குறித்து, தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி கூறியிருப்பதாவது:

மழைக்காலத்தில் விவசாயிகள் தங்களது நிலங்களில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால் வசதி செய்ய வேண்டும். வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு தாங்குக் குச்சிகள் அமைக்க வேண்டும். நாற்றங்கால்களில் மேட்டுப்பாத்தி அமைத்து தண்ணீர் தேங்குதல் மற்றும் வேர் அழுகலிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்களில் பாக்டீரியா வாடல் மற்றும் வேர் அழுகல் நோய் தாக்க வாய்ப்பு உள்ளது. நோய்க் கிருமிகள், மழை நீரில் எளிதில் வயல்களில் பரவி, பயிர்களை பாதிக்கிறது. மேலும், பந்தல் வகை காய்கறிகளைத் தாக்கும் சாம்பல் நோய், அடிச்சாம்பல் நோய், தேமல் நோயும் அதிகரிக்கலாம்.

வாடல் நோய் தாக்கம், நூற்புழுதாக்கம், வெள்ளை ஈ, அசுவினி போன்ற சாறு உறிஞ்சி பூச்சிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பயிரில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க விதைக்கும் முன்பே நுண்ணுயிரிகளான டிரைக்கோடெர்மோவிரிடி, பர்பியூரியோசிலியம் லீலாசினம் அல்லது கார்பன்டாசிம் ஆகியவற்றை கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஒரே வகை பயிர்களை திரும்பத் திரும்ப சாகுபடி செய்யாமல, பயிர் சுழற்சி முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வயலைச்சுற்றிலும் மஞ்சள் நிற பூக்களைக் கொண்ட சணப்பை, செண்டுமல்லி ஆகியவற்றை பயிரிட வேண்டும். நூற் புழுக்களை கட்டுப்படுத்த செண்டுமல்லி பூச்செடியை ஊடு பயிராகவும் சாகுபடி செய்ய வேண்டும்.

பொக்கோனியா கிளாமிடோஸ் போரியா என்ற பூஞ்சாணத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும். வயலில் நீர் தேங்காதவாறு வடித்து வெளியேற்றுவது மிகவும் அவசியம். இதனால் வேர் சம்பந்தப்பட்ட நோய்களை கட்டுப்படுத்தலாம்.

காய்கறி பயிர்களில் நோய் மற்றும் பூச்சிக்கட்டுப்பாடு மேலாண்மை குறித்த தகவல் களுக்கு, வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்புகொண்டு பயன் பெறலாம் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x