

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் காவலர் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றோருக்கு இலவச கையேடுகள் வழங்கப்பட்டன.
இக்கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் (அணி எண்- 54 மற்றும் 56) காவலர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் 60 பேர் பங்கேற்றுள்ளனர்.
காவல் துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், தேசிய திறனாய்வுத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மூலம் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச பயிற்சி கையேடு இரு தொகுதிகளாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி உணவுப்பொருள் வழங்கல் சிறப்பு வட்டாட்சியர் ஞானராஜ் பயிற்சி கையேடுகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆ.தேவராஜ், பா.பொன்னுத்தாய் மற்றும் கல்லூரி கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.