

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தாக்கம் குறைந்ததால், உத்தமசோழபுரத்தில் இயங்கிவந்த கரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூடப்பட்டது.
சேலம் மாவட்டம், உத்தம சோழபுரம், மாநில விவசாய விற்பனைக்கழக பயிற்சி மையத்தில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் 65 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 65 படுக்கை வசதி இருந்தது.
இம்மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கு உள்மருந்து சிகிச்சையாக 10 நாட்களுக்கு பிரம்மானந்த பைரவ மாத்திரை - தேன் , இஞ்சிசாறு, தாளிசாதி சூரணம் கேப்சூல்ஸ், ஆடாதோடை மணப்பாகு, அமுக்கிரா மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் வழங்கியதில், சிகிச்சை பெற்று வந்த அனைவரும் சில தினங்களில் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், கரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. கரோனா தொற்று தாக்கம் குறைந்த நிலையில், கரோனா சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனால், கடந்த 13-ம் தேதியுடன் கரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தை மூட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டார். தொடர்ந்து 100 நாட்கள் இயங்கி சிறப்பான சிகிச்சை வழங்கி வந்த கரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூடப்பட்டது.
இதுகுறித்து சித்த மருத்துவ சிறப்பு மைய தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன் கூறியது:
கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கப்பட்ட இம்மையத்தில் இதுவரை 704 நபர்கள் சேர்க்கப்பட்டு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 675 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கரோனா தொற்று தீவிர பாதிப்புக்கு உள்ளாகி வந்தவர்களில் 29 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து 100 நாட்கள் இயங்கி வந்த நிலையில், ஆட்சியரின் உத்தரவை ஏற்று கடந்த 13-ம் தேதியுடன் கரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு மூடப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.