கணவரை கொன்றதாக மனைவி உட்பட 3 பேர் கைது

கணவரை கொன்றதாக மனைவி உட்பட 3 பேர் கைது
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள சீலைப்பிள்ளையார் புதூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அருள்மணி(50). விவசாயி. இவரது மனைவி திலகவதி(42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். திலகவதிக்கும் காட்டுப்புத்தூர் பாரதியார் தெருவைச் சேர்ந்த விவசாய தொழிலாளியான ராஜா(39) என்பவருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளாக கூடா நட்பு இருந்துள்ளது.

இதனால், அருள்மணியும், திலகவதியும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், ஒரு வாரத்துக்கு முன் அருள்மணி குடிபோதையில் திலகவதி வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த திலகவதி ராஜாவிடம் கணவர் அருள்மணியை கொலை செய்ய வற்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து, ராஜா சீலைப்பிள்ளையார்புதூர் மேலத்தெருவைச் சேர்ந்த அவரது நண்பரான சிவகுமார் என்கிற குமார்(47) மூலம் நவ.18-ம் தேதி அருள்மணியை மாயனூர் பரிசல் துறை பகுதிக்கு அழைத்து வரச்செய்து மது அருந்தியுள்ளனர். அதன்பின்னர், சிவகுமார் மற்றும் ராஜா இருவரும் சேர்ந்து அருள்மணியை அரிவாளால் வெட்டிக் கொன்று சடலத்தை காவிரி ஆற்றில் வீசிச் சென்றுள்ளனர்.

மாயனூர் பழைய பரிசல் துறை அருகே உடலில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த அருள்மணியின் சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில், மாயனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அருள்மணி கொலை வழக்கில் சிவகுமார் என்கிற குமார், ராஜா, திலகவதி ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in