Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

நெல்லையில் தொடர் மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது பல இடங்களில் பொதுமக்கள் போராட்டம்

திருநெல்வேலியில் தொடர் மழையால் பல்வேறு பகுதி களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப் பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட் டனர்.

திருநெல்வேலியில் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பாளையங் கோட்டை அண்ணாநகரில் நூற்றுக் கணக்கான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, ஹைகிரவுண்ட், சீனிவாச நகர் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள ஓடைகள் வழியாக பாளையங்கோட்டை வெட்டுவான் குளத்துக்கு சென்றுசேரும். ஆனால், இப்பகுதியிலுள்ள ஓடை கள் தூர்வாரப்படாமல் இருப்பதால் மழைநீர் வழிந்தோட முடியாமல்ம் இப்பகுதி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதி யில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியுற்றனர்.

இதுகுறித்து, தெரியவந்ததும் வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்குவந்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஓடைகளை தூர்வாரி தண்ணீர் வழிந்தோட வழிசெய்தனர்.

மனகாவலம்பிள்ளை நகர்

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் திருவள்ளுவர் தெரு, ஆசாத் தெரு, திருமலை தெரு, வஉசி தெரு பகுதிகளில் உள்ள நூற்றுக் கணக்கான குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. மழை நீரோடு, கழிவு நீரும் கலந்து வீடுகளைச் சூழ்ந்ததால் மக்கள் அவதியுற்றனர். அப்பகுதியில் கழிவுநீர் செல்லும் ஓடையை மறித்து வீடுகள் கட்டியிருப்பதால் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீரை வழிந்தோடச் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள், பாளையங்கோட்டை- திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் அங்குவந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

சாந்திநகர்

பாளையங்கோட்டை சாந்திநகர்- சீவலப்பேரி சாலையில் தரைப் பாலத்தின் அடியில் கழிவுநீர் செல்ல குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்கள் வழியாக வெள்ளம் செல்லமுடியாமல் சாந்திநகரில் 1-வது மெயின் ரோடு, 3, 4, 5, 6-வது தெருக்களில் உள்ள குடியிரு ப்புகளை சூழ்ந்தது. இதுபோல் எம்.ஜி.ஆர். நகர், இந்திராநகர் பகுதிகளிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மேலப்பாளையம் 32வது வார்டில் கனமழையால் ஆண்டவர் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர் கள் கலைந்து சென்றனர்.

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் சியாமளா அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டின் மாடிப்பகுதி மழையால் இடிந்து விழுந்தது. வண்ணார்பேட்டையில் இஎஸ்ஐ மருத்துவமனை எதிரே மழையால் மரம் முறிந்து விழுந்தது. அப்பகுதி காலியிடம் என்பதால் பாதிப்பு ஏதுமில்லை.

சாந்திநகரில் 1-வது மெயின் ரோடு, 3, 4, 5, 6-வது தெருக்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதுபோல் எம்.ஜி.ஆர். நகர், இந்திரா நகர் பகுதிகளிலும் குடியிருப் புகளை தண்ணீர் சூழ்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x