

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் உள்ள குரு பகவான் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.
குருவித்துறை வைகை ஆற்றங்கரையில் சித்திரரத வல்லபப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு குரு பகவான் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு 9.47 மணி அளவில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனார்.
இதையொட்டி கோயிலில் குரு பகவானுக்கு யாகம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அனைத்து ராசிகளுக்கும் சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெண்மணி, கோயில் செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
குரு பெயர்ச்சியையொட்டி சிறப்புப் பேருந்து வசதி செய்யப் பட்டிருந்தது. மதுரை மாவட்டக் கூடுதல் கண்காணிப்பாளர் வனிதா தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.