

கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பரவை காய்கறி மார்க்கெட் 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படுகிறது.
மதுரை விளாங்குடி அருகே பரவையில் தென் தமிழகத்தின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் செயல்பட்டது. கரோனா ஊரடங்கால் பரவை மார்க்கெட் ஜூலை 19 முதல் கப்பலூர் உச்சப்பட்டி துணைக்கோள் நகரம் அருகே தற்காலிகமாக மாற்றப்பட்டது.இந்நிலையில் பரவையில் நேற்று முதல் மார்க்கெட் செயல்பட ஆட்சியர் அனுமதி வழங்கினார். பரவையில் நேற்று மாலை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மார்க்கெட்டை திறந்து வைத்தார். ஆட்சியர் டி.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் எஸ்.விசாகன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை பரவை மார்க்கெட் சங்கத் தலைவர் எஸ்.மனுவேல் ஜெயராஜ் வெளியிட்ட அறிக்கை:
மார்க்கெட் மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை செயல்படும். சரக்கு ஏற்றும் வாகனங்கள் இரவு 10 மணி முதல் அனுமதிக்கப்படும்.
சமூக இடைவெளி, கிருமி நாசினியால் கழுவுவது, வெப்ப நிலை அறிதல், கபசுரக் குடிநீர், முகக்கவசம் உள்ளிட்ட விதிகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.