

மதுரை செயின்ட் மேரீஸ் தேவாலய வாசல் அருகே நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் துண்டித்த நிலையில் மனித தலை ஒன்று கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கீரைத்துறை போலீஸார் தலையைக் கைப்பற்றி, உடலைத் தேடினர். ஏறக்குறைய நூறு மீட்டர் தொலைவில் தேவாலயக் காம்பவுண்ட் சுவர் அருகே உடலை மீட்டனர். தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவருக்கு வயது சுமார் 20 முதல் 25 இருக்கும். சம்பவ இடத்தை துணை ஆணையர் சிவபிரசாத் பார்வையிட்டார்.
கீரைத்துறை போலீஸார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த பாரதி கணேசன் என்பவரின் மகன் முருகானந்தம் (22) என்பதும், காரில் வந்த கும்பல் ஒன்று அவரைக் கொலை செய்துவிட்டுத் தப்பியதும் தெரிய வந்தது. மேலும் முருகானந்தத்துடன் நடந்து சென்ற முனியசாமி என்ற இளைஞருக்கும் வெட்டு விழுந்துள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் விசாரிப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.