

இலங்கையில் வேளாண் விளை பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ரூ.50 கோடிக்கு மேல் மஞ்சள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதுதொடர்பாக ஈரோட்டில் அவர் கூறியதாவது:
இலங்கையில் விவசாயம், உணவு உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் என்ற நோக்குடன், விளை பொருட்கள், உணவு பொருட்கள் இறக்குமதிக்கு அந்நாடு தடை விதித்துள்ளது. கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக, இத்தடையை தீவிரமாக அமல்படுத்துகின்றனர். இதன் காரணமாக, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து, கடத்தல் மூலம் விளை பொருட்கள் அங்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதில், ஈரோடு, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து மஞ்சள் வாங்கி, ராமேசுவரம், வேதாரண்யம், கோடியக்கரை பகுதிகள் வழியாக, இலங்கைக்கு படகுகளில் அதிகமாக கடத்துகின்றனர். ராமேசுவரம் பகுதியில் இதுவரை, ஐந்து டன்னுக்கு மேல் மஞ்சளை பறிமுதல் செய்துள்ளனர்.
தடைக்கு முன்பாக, தமிழகத்தில் இருந்து, இலங்கைக்கு மஞ்சள் உட்பட பல்வேறு உணவு பொருட்கள் ஏற்றுமதியாகி வந்தது. இலங்கைக்கு கொண்டு செல்வதில், போக்குவரத்து செலவு மிகவும் குறைவு என்பதால், அந்த மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஈரோடு, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து, ஆண்டுக்கு ஒரு லட்சம் மூட்டைக்கு (ஒரு குவிண்டால்) மேல் இலங்கைக்கு ஏற்றுமதியாகி வந்தது.
இலங்கை அரசு மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதித்ததால், தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு, ரூ.50 கோடிக்கு மேல் மஞ்சள் வர்த்தகம் பாதித்துள்ளது. எனவே, இந்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இலங்கையில் மஞ்சளை விளைவித்தாலும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் நிறைவேற்ற வேண்டும், என்றார்.