

தீபாவளி அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் 252 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.72.52 லட்சத்துக்கு விற்பனையானது.
சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகரில் 4 இடங்களிலும், மாவட்டப் பகுதிகளில் 7 இடங்களிலும் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. உழவர் சந்தைகளில் வழக்கத்தை விட, பண்டிகை மற்றும் விரத நாட்களில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை அதிகமாக இருக்கும். இந்நிலையில், ஐப்பசி அமாவாசை, தீபாவளி மற்றும் வரலட்சுமி விரதம் என நேற்று முன்தினம் முக்கிய விசேஷ நாட்கள் அமைந்தது. இதனால், ஏராளமான மக்கள் அதிகாலையிலேயே உழவர் சந்தைக்கு வந்திருந்து, தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கிச் சென்றனர்.
அதிகபட்சமாக, சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் 49,766 கிலோ காய்கறிகள், 3,995 கிலோ பழங்கள் ரூ.12,72,328-க்கு விற்பனையானது. மொத்தம் 10,752 நுகர்வோர்கள் வந்திருந்தனர். தாதகாப்பட்டியில் 40.01 டன் காய்கறி மற்றும்பழங்கள் ரூ.12,61,643-க்கும், ஆத்தூரில் 40.64 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.12,47,431-க்கும் விற்பனையானது.
அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் 22.72 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.7,40,683-க்கும், அம்மாப்பேட்டையில்17.26 டன் காய்கறி, பழங்கள் ரூ.5,30,380-க்கும், ஆட்டையாம்பட்டியில் 11.88 டன் ரூ.3.14 லட்சத்துக்கும், இளம்பிள்ளையில் 10.81 டன் ரூ.3.01 லட்சத்துக்கும், எடப்பாடியில் 7.75 டன் ரூ.4.37 லட்சத்துக்கும், ஜலகண்டாபுரத்தில் 11.59 டன் ரூ.3.66 லட்சத்துக்கும், மேட்டூரில் 14.85 டன் ரூ.4.62 லட்சத்துக்கும், தம்மம்பட்டியில் 10.76 டன் ரூ.3.19 லட்சத்துக்கும் விற்பனையானது.
மாவட்டம் முழுவதும் 252.07 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.72,52,267-க்கு விற்பனையானது.