பசுமை பழத்தோட்டம் உருவாக்க முயற்சி தூத்துக்குடியில் ஒரேநேரத்தில் 300 பழமரக் கன்றுகள் நடவு

தூத்துக்குடி கணேஷ் நகர் நுண் உர செயலாக்க மைய வளாகத்தில்  ஒரே நேரத்தில் 300 பழமரக் கன்றுகளை நடும் பணியை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி கணேஷ் நகர் நுண் உர செயலாக்க மைய வளாகத்தில் ஒரே நேரத்தில் 300 பழமரக் கன்றுகளை நடும் பணியை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

தூத்துக்குடி கணேஷ் நகர் நுண் உர செயலாக்க மைய வளாகத்தில் பசுமை பழத்தோட்டத்தை உருவாக்கும் முயற்சியாக ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 300 பழமரக் கன்றுகள் நடப்பட்டன.

தூத்துக்குடி மாநகராட்சி மேற்குமண்டலப் பகுதியில் தினசரி 50 டன்னுக்கு மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் மக்கும் குப்பைகள் நுண் உர செயலாக்க மையங்களில் உரமாக்கப்படுகின்றன. மக்காத குப்பைகளில் இருந்து மறு சுழற்சிக்கு பயன்படும் பிளாஸ்டிக், காகிதம் மற்றும் உலோகப் பொருட்களை துப்புரவு பணியாளர்களே தனியாக பிரித்து வியாபாரிகளிடம் நேரடியாக விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ரூ.50 வீதம் கடந்த ஆறு மாதங்களில் ரூ.10 ஆயிரம் வரை கிடைத்துள்ளது.

மீதமுள்ள மக்காத குப்பைகளில் மறு சுழற்சிக்கு பயன்படக் கூடிய பொருட்களை நுண் உர செயலாக்க மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தனியாக பிரித்தெடுத்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் அவர்கள் ரூ.30 ஆயிரம் சேமித்துள்ளனர்.

இந்தப் பணத்தை கொண்டு தன்னார்வலர்கள் உதவியோடு மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை. மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையிலும், இயற்கையை பாதுகாக்கும் விதமாகவும் கணேஷ் நகர் நுண் உர செயலாக்க மையப் பகுதியில் பசுமை பழத்தோட்டத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஒரே நேரத்தில் 300 பழமரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த பணியை ஆணையர் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

மாநகர நகர் நல அலுவலர் எஸ்.அருண்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பணியாளர்கள் அனைவரும் பழமரக் கன்றுகளை நட்டனர். தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலம் பசும்பொன் நகர் பகுதியில் ஏற்கெனவே குறுங்காடு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியில் பசுமை பழத்தோட்டம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in