சம்பளம் வழங்குவதில் தாமதம் சேலம் மாநகராட்சி ஊழியர்கள் வேதனை

சம்பளம் வழங்குவதில் தாமதம்  சேலம் மாநகராட்சி ஊழியர்கள் வேதனை
Updated on
1 min read

சேலம் மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், தீபாவளி கொண்டாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களில் 1,100 தூய்மைப் பணியாளர்களும், 400-க்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர்களும் பணிபுரிகின்றனர். வழக்கமாக மாதம் தோறும் 5-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும். தற்போது, சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. அதேபோல, மாநகராட்சி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் நேற்று வரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக சேலம் மண்டல மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தலைவர் வெங்கடாஜலம் நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி பணியாளர்கள் கூறும்போது, “கரோனா தொற்று பரவலால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறோம். இந்நிலையில், தீபாவளி நெருங்கிய நிலையில் மாநகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படவில்லை. நேற்றுதான் தீபாவளி முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை கொண்டு குடும்ப செலவை சமாளிப்பது கஷ்டம் என்பதால் தீபாவளி நேரத்தில் வேதனை அடைந்துள்ளோம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in