

சம்பளம் மற்றும் போனஸ் வழங்கக் கோரி புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த மற்றும் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தின் முன்வாசல் கதவைப் பூட்டி தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவுக்கு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலையின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கசி.விடுதலைக்குமரன் தலைமை வகித்தார். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி, கலைந்துபோகச் செய்தனர்.
இதேபோல, தீபாவளி போனஸை குறைக்காமல் வழங்கக் கோரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள், புதுக்கோட்டையில் உள்ள மண்டல அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார்.
இதேபோல, விராலிமலை அருகே பூதகுடி மற்றும் திருமயம் அருகே லெணாவிலக்கில் உள்ள சுங்கச்சாவடிகளில் பணிபுரியும் பணியாளர்களும் போனஸ் வழங்கக் கோரி நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.