Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடக்கம் 7 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம் என ஆட்சியர் சண்முகசுந்தரம் தகவல்

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் எளிதாக கடந்து செல்ல ரூ.1.80 கோடி மதிப்பில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை பூமி பூஜை செய்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் தினசரி பல்வேறு இடங்களில் விபத்துகளும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, வேலூர் மாவட்டம் பூட்டுத்தாக்கு, பெருமுகை, அலமேலுரங்காபுரம், சத்துவாச்சாரி, பள்ளிகொண்டா போன்ற பகுதிகளிலும், திருப்பத் தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணி யம்பாடி, நெக்குந்தி உள்ளிட்ட பகுதிகளில் சாலை விபத்துகள் அதிகரித்து வந்தன.

தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழும் விபத்துகளை தவிர்க்க மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்க வேண்டும் என பலதரப்பட்ட மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். வேலூர் சத்துவாச்சாரியில் கெங்கை யம்மன் கோயில் பகுதியில் இருந்து எதிரேயுள்ள வட்டார போக்கு வரத்து அலுவலக சாலைக்கு செல்லும் பொதுமக்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சிக்கும்போது விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சம்பவங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வந்தன.

எனவே, இதை தவிர்க்க சத்துவாச்சாரி பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், சத்துவாச்சாரி பகுதியில் ரூ.1.80 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்புதல் சமீபத்தில் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சத்துவாச் சாரியில் சுரங்கப்பாதை அமைப் பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து பூமி பூஜையை தொடங்கி வைத்தார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் நாராயணரெட்டி, திட்ட தலைமை அலுவலர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் கூறும்போது, "சத்துவாச் சாரியில் ஒரு புறத்தில் இருந்து எதிர்புறம் செல்ல தேசிய நெடுஞ் சாலையை பொதுமக்கள் கடக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழக் கின்றனர். இதை தடுக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக் கும் பணிகள் தொடங்கப்பட்டுள் ளன. இப்பணிகள் 7 மாதங்களில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள் ளது. சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் இப்பகுதியில் ஒரு சில போக்கு வரத்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, வாகன ஓட்டிகள், சுரங்கப்பாதை நடைபெறும் பகுதியில் நிதானமாக செல்ல வேண்டும், மாற்றுப்பாதையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாதசாரிகள் சத்துவாச்சாரி கோவை ஜூஸ் அருகே ஏற்கெனவே அமைந்துள்ள சுரங்கப்பாதையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் சங்கரன், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் பெரியதுரை, சாம்சன், ஜெய்குமார், வேலூர் வட்டாட்சியர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x