

தமிழகம் முழுவதும் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டிடத்தை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வடகிழக்குப் பருவ மழையை எப்படிக் கையாள வேண்டும் என்று முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பருவ மழையால் உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் ஏற்படக் கூடாது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் மழை நீரை வீணாக்காமல் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் சாலைகளில் மழை நீர் தேங்கும் 280 இடங்கள் கண்டறியப்பட்டு நீர் தேங்காமல் இருக்க வழிந்தோடும் வகையில் மழைநீர் உட்கட்டமைப்பு செய்யப் பட்டுள்ளது. மாவட்டத்தில் 27 தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அதற்குரிய மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, கிருஷ்ணகிரி அணைகளில் நீர் கொள்ளளவு அதிகமாக உள்ளது. மேலும் மேட்டூர் பவானிசாகர், அமராவதி, பெருஞ்சாணி, சோலையாறு, ஆழியாறு, திருமூர்த்தி அணை, சாத்தனூர் அணையில் நீர் கொள்ளளவு கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் அன்பழகன், எம்எல்ஏக் கள் வி.வி.ராஜன் செல்லப்பா, கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவ ணன், பெரியபுள்ளான் என்ற செல் வம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.