Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

கோவையில் 136 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணி முதல்கட்ட ஆய்வு அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிப்பு

இந்தியாவில் மாநில தலைநகரங்களுக்கு அடுத்து, வேகமாக வளர்ந்துவரும் 19 இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அந்த நகரங்களில் கோவையும் ஒன்று. கோவையில் தற்போது அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கை, அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் போன்றவற்றை கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் இத் திட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும், மாநகரில் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை உள்ளிட்ட இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுவருவதும், அவிநாசி சாலையில் விரைவில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்க உள்ளதாலும், மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடங்குமா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான முதல்கட்ட ஆய்வை முடித்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக உயர் அதிகாரிகள் கூறும்போது,‘‘கோவையில் மொத்தம் 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, சத்தியமங்கலம் சாலை, தொண்டாமுத்தூர் சாலை ஆகிய 5 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கூடுதலாக வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு செல்லும் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளோம். மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் இந்த அறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர். ஒப்படைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கரோனா தொற்று காரணமாக, கடந்த சில மாதங்களாக இந்தப் பணியில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் இதற்கான திட்டப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x