

வங்கி மூலம் மகளிருக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.13.36 லட்சம் மற்றும் 17 பவுன் நகைகளை வசூலித்து ஏமாற்றியதாக, உசிலம்பட்டியைச் சேர்ந்த தம்பதி மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள ஆரியபட்டியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (41). கவுன்டன்பட்டியைச் சேர்ந்தவர் உஷா (எ) வாசலட்சுமி. இவர் கடந்த செப்டம்பரில் முத்துலட்சுமிக்கு அறிமுகமானார். அப்போது, வங்கியில் கணவருக்குத் தெரிந்த நபர்கள் மூலம் மகளிருக்கான கடன் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். இதை முத்துலட்சுமி நம்பினார். இந்நிலையில், முத்துலட்சுமி மற்றும் அவருக்கு தெரிந்த நபர்களிடம் இருந்து ரூ. ரூ. 13.36 லட்சம் மற்றும் 17 பவுன் நகைகளை உஷா வசூலித்துள்ளார்.
ஆனால், பேசியபடி அவர் வங்கிக் கடன் பெற்றுத் தரவில்லை. பணம், நகையைத் திருப்பித் தரவில்லை.
இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸில் முத்துலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் உஷா, அவரது கணவர் சந்தோஷ் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.