

ரங்கத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலைகளில் வாகனங்களை நிறுத்த மாநகராட்சி கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதற்கு நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் எம்.சேகரன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
ரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை அம்மா மண்டபம் சாலை, காந்தி சாலை, ரங்கம் கிளப் வளாகம், பஞ்சக்கரை சாலை ஆகிய இடங்களில் நிறுத்துவதற்கு ஒப்பந்ததாரர் மூலம் கட்டணம் வசூலிப்பதற்காக பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிய மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை வசம் உள்ள இந்த சாலைகளை, அந்த துறைகள்தான் பராமரித்து வருகின்றன. இந்த சாலைகளில் வாகனக் கட்டணத்தை மாநகராட்சி வசூலிப்பது நியாயமில்லை.
மேலும், இந்த சாலைகளில் வாகனங்களை நிறுத்திக்கொள்ள அனுமதித்தால், இதர வாகனங்களின் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருக்கும். எனவே, இந்த முடிவை கைவிட்டு, ரங்கத்தில் அனைத்து உள்கட்டமைப்புகளுடன் கூடிய வாகன நிறுத்தங்களை புதிதாக ஏற்படுத்தி, அங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.