

பொதுத்துறை தொழிலாளர் களுக்கு போனஸ் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதன் பொதுச் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
கடந்த காலத்தில் 20 சதவீதம் போனஸ் தொகை என்பது, 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 8.33 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர்.
1 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களால் தமிழக சிறை முழுவதும் நிரம்பியது. நீதிமன்றத்தின் தலையீட்டில் போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் 2015ல் தொழிலாளர் விரோத கொள் கையை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்த பொதுத்துறை அனைத்து சங்கங்களும் திட்டமிட்டன.
அப்போது மீண்டும் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. தற்போது தமிழக அரசு தன்னிச்சையாக 10 சதவீதம் போனஸ் அறிவித்துள்ளது. இது ஏமாற்றம் அளிக்கிறது. 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். தீபாவளி முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.