காந்தி மியூசியத்தில் மியாவாக்கி அடர் வனம் சுற்றுலாப் பயணிகளை கவர ஏற்பாடு

காந்திமியூசியம் வளாகத்தில் அடர்வனத்தை உருவாக்க மரக்கன்றுகளை நடும் மாநகராட்சி ஆணையாளர் விசாகன்.
காந்திமியூசியம் வளாகத்தில் அடர்வனத்தை உருவாக்க மரக்கன்றுகளை நடும் மாநகராட்சி ஆணையாளர் விசாகன்.
Updated on
1 min read

மதுரை நகரை பசுமையான, தூய்மையான மாநகராக மாற்றவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் மாநகராட்சி நிர்வாகம் அடர் வனங்களை உருவாக்கி வருகிறது. மரக்கன்றுகள் நடும் சமூக அமைப்புகளையும் ஊக்குவிக்கிறது. அதன் அடிப்படையில் காந்தி மியூசியம் வளாகத்தில் குறைந்த இடத்தில் அதிக மரக்கன்றுகளை நட்டு மியாவாக்கி முறையில் அடர்வனம் உருவாக்கும் முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மரக்கன்றுகளை நட்டு இப்பணியைத் தொடங்கி வைத்தார்.

அவர் கூறியதாவது: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான விளாங்குடி இந்திரா நகர், தத்தனேரி மயானம், எல்லீஸ் நகர் நீரேற்று நிலையம் உட்பட 25 இடங்களில் மியாவாக்கி (அடர்வனம்) முறையில் ஒவ்வொரு இடத்திலும் சுமார் 100 மரக்கன்றுகள் வீதம் சுமார் 3000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 15 இடங்களில் குறுங்காடுகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது மதுரை சொராப்ட்டிமிஸ்ட் இண்டர்நேஷனல் தொண்டு நிறுவனம் சார்பில் காந்தி மியூசியம் வளாகத்தில் வேங்கை, மதுரம், இலுப்பை, நீர்மருது உட்பட சுமார் 120 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மியாவாக்கி முறையில் மூலம் மரக்கன்றுகள் நடுவதால் குறைந்த இடத்தில் அதிக மரங்களை வளர்க்கலாம். இதனால் வெப்பம் குறையும். இந்த சிறிய வனத்துக்குள் பறவைகள், சிறிய புழு, பூச்சிகள், தேனீக்கள் அதிகளவில் வாழ்வதற்கான சூழல் ஏற்படுவதுடன் உயிர்ச் சூழலும் மேம்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் காந்தி மியூசியம் பொறுப்பாளர் நந்தகுமார், உதவிச் செயற்பொறியாளர் மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், உதவிப்பொறியாளர் சோலைமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in