மான், மயில்களால் சேதம் அதிகரிப்புமாற்றுப் பயிர்களுக்கு மாறும் விவசாயிகள் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விளைநிலத்தில் மயில்கள் நுழைவதைத் தவிர்க்க விவசாயிகள் குச்சிகளில் வெள்ளைத் துணிகளை கட்டி நட்டு வைத்துள்ளனர். 	       படம்: கி.பார்த்திபன்
விளைநிலத்தில் மயில்கள் நுழைவதைத் தவிர்க்க விவசாயிகள் குச்சிகளில் வெள்ளைத் துணிகளை கட்டி நட்டு வைத்துள்ளனர். படம்: கி.பார்த்திபன்
Updated on
1 min read

மோகனூர் அருகே விளைநிலங் களில் மான், மயில்கள் புகுந்து அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை நாசம் செய்வதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அரூர் ஊராட்சி. இங்கு உள்ள ஏரி 450 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. ஏரியை மையமாகக் கொண்டு பல நூறு ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மக்காச்சோளம், பருத்தி, கடலை போன்றவை பிரதான பயிர்களாகும். இந்நிலையில் கொல்லிமலை, தலைமலையில் இருந்து இங்கு வரும் மயில்கள் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுபோல் மான்களும் பயிர்களை சேதம் செய்வதாக வேதனை தெரிவி்க்கின்றனர்.

இதனால் விவசாயிகள் பலர் வழக்கமாக சாகுபடி செய்யும் பயிர்களை தவிர்த்து கொட்டமுத்து உள்ளிட்ட மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக விவசாயிகள் பி.வடிவேல், ஜி.கணேசன் ஆகியோர் கூறியதாவது:

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் வழி தவறி வந்த 50-க்கும் மேற்பட்ட மான்கள் அரூர் ஏரிப் பகுதியில் கூட்டமாக வசிக்கின்றன. இவை விவசாய தோட்டத்தில் புகுந்து மக்காச்சோளம், பருத்தி மற்றும் கடலை பயிர்களை சாப்பிட்டு விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

இதுபோல் மயில்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. மான், மயில் தொல்லையால் இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை வனத்துறையினர் கவனத்தில் கொண்டு இப்பகுதியில் உலவும் மான்களை பிடித்து வனப்பகுதியினுள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மயில்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in