ஈரோட்டில் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் கூட்டம் திமுக மூத்த நிர்வாகிகள் 137 பேருக்கு பொற்கிழி

ஈரோட்டில் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் கூட்டம் திமுக மூத்த நிர்வாகிகள்  137 பேருக்கு பொற்கிழி
Updated on
1 min read

ஈரோடு மாவட்ட திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம்’ எனும் தலைப்பில் நடந்த கூட்டத்தில், திமுகவின் மூத்த நிர்வாகிகள் 137 பேருக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்ட திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம்’ எனும் தலைப்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஈரோடு பவானிசாலையில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் 345 இடங்களில், ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் காணொலிக் காட்சி மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். திமுகவின் மூத்த நிர்வாகிகள் 137 பேருக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு முன்பாக, திமுக துணைப் பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் உள்ளிட்டோர் பேசினர். திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமி பேசியதாவது:

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் ஏமாந்து விட்டு விட்டோம் என்பது உண்மை. இந்த தேர்தலில் மேற்கு மண்டலத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தருவோம். ஈரோட்டில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்க தடை எழுந்தபோது, நீதிமன்றம் மூலமாக போராடி ஸ்டாலின் அனுமதி பெற்றுத் தந்தார். அதன் அருகிலேயே ஜெயலலிதா சிலை வைக்க முயற்சிக்கப்பட்டது. அப்போது, வழக்கறிஞர்களிடம்,‘ஈரோட்டில் ஜெயலலிதா சிலை வைக்க நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள்’ என ஸ்டாலின் தெரிவித்தார். அவரது முயற்சியால் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி கிடைத்தது. அருந்ததியர்களுக்கு திமுக ஆட்சியில் 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதால், அவர்களின் வாழ்க்கையே மாறியுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in