கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு சேலத்தில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் திறப்பு

கரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கான புதிய கண்காணிப்பு மையம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள ஆவி பிடிக்கும் கருவியை பரிசோதிக்கும் மருத்துவர்கள்.     படம்: எஸ்.குரு பிரசாத்
கரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கான புதிய கண்காணிப்பு மையம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள ஆவி பிடிக்கும் கருவியை பரிசோதிக்கும் மருத்துவர்கள். படம்: எஸ்.குரு பிரசாத்
Updated on
1 min read

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த கவனிப்பு மற்றும் தொடர் கண்காணிப்பு மையத்தை ஆட்சியர் ராமன் திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகி, சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தவர்களை கண்காணித்து, அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும், மன அழுத்தத்தை போக்கவும் புதிய ஒருங்கிணைந்த கவனிப்பு மற்றும் தொடர் கண்காணிப்பு மையம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்தவர்கள் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு பிறகு உடல் நலனை பாதுகாக்கவும் உடல் மற்றும் மனநல பிரச்சினைகளுக்கு வேண்டிய வழிமுறைகள் பற்றிய ஆலோசனை இந்த மையத்தில் வழங்கப்படுகிறது. இம்மையம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அறை எண் 70-டி பிரிவில் இயங்குகிறது. இம்மையத்தில் பொது மருத்துவ துறை நிபுணர், நுரையீரல் பிரிவு நிபுணர், மனநல நிபுணர், உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவ துறை நிபுணர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ துறை நிபுணர் மற்றும் உணவியல் நிபுணர்களால் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

தொலைதூர ஆலோசனை மூலமும் பயன்பெறலாம். தொற்றில் இருந்து மீண்டபிறகு பிளாஸ்மா தானம் செய்ய விரும்புவோர் இம்மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப் பணிகள்) மலர்விழி வள்ளல், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in