

தூத்துக்குடி வஉசி துறைமுகப் பொறுப்புக்கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வஉசிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம், துறைமுக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்காக பெருநிறுவன சமூகப் பொறுப்பு செயல்பாட்டின் கீழ் புதிய பேருந்து வழங்கியுள்ளது.
துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் பேருந்துக்கான சாவியை, துறைமுக கல்விக் கழகத்தின் தலைவர் மல்லா சீனிவாச ராவிடம் வழங்கினார். துறைமுக துணை தலைவர் பிமல்குமார் ஜா, துறை தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னிலை வகித்தனர்.
துறைமுக தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் சுனாமி காலனி, முத்தையாபுரம், துறைமுக காலனி மற்றும் பொட்டல்காடு பகுதியை சார்ந்த மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக 58 இருக்கைகள் வசதியுடைய, ரூ.18,66,601 மதிப்பிலான இந்தப் பேருந்து வழங்கப்பட்டுள்ளது.
வஉசி துறைமுகம் ஒவ்வொரு நிதியாண்டும் நிகர லாபத்தில் 2 சதவீதம் நிதியை சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 2020-2021-ம் நிதியாண்டு சமூக நலத்திட்டங்களுக்காக ரூ.2.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.