Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

சென்னையில் கொட்டித் தீர்த்த மிக கன மழை: சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையில் நேற்று விடிய விடிய மிக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.வீடுகளில் மழை நீர் புகுந்ததால்மக்கள் அவதிக்குள்ளாயினர்.

சென்னையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இருந்து விடிய,விடிய பரவலாக கனமழை பெய்தது. சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 18 செமீ, அண்ணாபல்கலைக்கழகத்தில் 14 செமீ, நுங்கம்பாக்கம், புழல் ஆகிய பகுதிகளில் தலா 13 செமீ, சென்னைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்10 செமீ, அம்பத்தூரில் 9 செமீ, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகியஇடங்களில் தலா 8 செமீ, தண்டையார்பேட்டையில் 7 செமீ, பெரம்பூரில் 6 செமீ, அயனாவரம், எம்ஜிஆர் நகர் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகி இருந்தது.

சென்னையில் பெய்த மிக கனமழை காரணமாக அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் காலை நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால், பல இடங்களில் பால் விநியோகம் தாமதமானது.

பல சுரங்கப் பாலங்களில் மழைநீர் தேங்கியது. மாநகராட்சி மற்றும்நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனுக்குடன் சுரங்கப் பாலங்களில் இருந்து மழைநீரை வெளியேற்றினர். திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, பட்டாளம், மயிலாப்பூர், கொடுங்கையூர், வியாசர்பாடி, வேப்பேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உட்புறச் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இப்பகுதிகளில் பல வீடுகளில்மழைநீர் புகுந்தது. அதனால் அந்தவீடுகளில் வசித்த பொதுமக்கள்அவதிக்குள்ளாயினர். மழைநீர்தேங்கிய பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

மிக கனமழை காரணமாக சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

பல இடங்களில் தெருவோரம் தேங்கிக் கிடந்த குப்பைகளுடன் மழை நீர் தேங்கியதால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசியது. மேடவாக்கம்- வேளச்சேரி சாலையில் ஏற்கெனவே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வந்தநிலையில், சாலையில் மழைநீரும் தேங்கியதால்,கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை மக்கள் வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க 044 2538 4530, 044 2538 4540 ஆகிய அவசர எண்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மேலும் 1913 என்ற மாநகராட்சி புகார் எண்ணையும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x