Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

ஜல்ஜீவன் திட்டத்தில் சேலத்தில் ரூ.118 கோடியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.118 கோடியே 46 லட்சம் மதிப்பில் சேலம் மாவட்டத்தில் 64 ஊராட்சிகளுக்குட்பட்ட 1,143 குக்கிராமங்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 288 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய திட்டமாக ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி தரமான குடிநீரை ஒவ்வொரு நபருக்கும் தினசரி தலா 55 லிட்டர் குடிநீர் தொடர்ந்து வழங்கப்படுவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டம் 2020-21-ம் நிதியாண்டில் தொடங்கி 2023-24-ம் நிதியாண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்கு 45 சதவீதமும், மாநில அரசின் பங்கு 45 சதவீதமும் பொதுமக்களின் பங்கு 10 சதவீதமும் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 71 ஆயிரத்து 683 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. முதல் கட்டமாக 2020-21-ம் நிதியாண்டுக்காக, ரூ.118 கோடியே 46 லட்சம் மதிப்பில், சேலம் மாவட்டத்தில் உள்ள 64 கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட 1,143 குக்கிராமங்களில் உள்ள 1 லட்சத்து 10 ஆயிரத்து 288 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த நிதியாண்டில் சேலம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டம் தவிர்த்து பிற திட்டங்களின் மூலம் 321 கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட 649 குக்கிராமங்களில் உள்ள 87 ஆயிரத்து 583 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2021 - 22-ம் நிதியாண்டில் 173 கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட 1,779 குக்கிராமங்களில் உள்ள 1 லட்சத்து 90 ஆயிரத்து 79 வீடுகளுக்கும் 2022 - 23-ம் நிதியாண்டில் 1,538 குக்கிராமங்களில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 733 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

இதன் மூலம் மொத்தம் மூன்றாண்டுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்படாத 5 லட்சத்து 71 ஆயிரத்து 683 வீடுகளுக்கும் 2022-23 ம் நிதியாண்டுக்குள் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x