Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

குரும்பப்பட்டி பூங்காவுக்கு 3 மரநாய் குட்டிகள் வருகை

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு வந்துள்ள மரநாய்க்குட்டிகள் கூண்டில் அடைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

சேலம்

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு மன்னார்குடி வனத்துறை அலுவலகத்தில் இருந்து அரிய வகை உயிரினமான 3 மரநாய் குட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா தமிழகத்தின் சிறு உயிரியல் பூங்காக்களில் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. இங்கு மான், குரங்கு, முதலை, வெள்ளை மயில் உள்பட 160-க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் உள்ளன. சேலம் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக உள்ள குரும்பப்பட்டி பூங்காவில் மேலும் புதிய விலங்குகளை கொண்டு வர வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இருந்து 6 மாத வயது கொண்ட ஒரு ஆண், 2 பெண் என 3 மரநாய் குட்டிகள் குரும்பப்பட்டி பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவை தனிக்கூண்டில் அடைக்கப்பட்டு பராமரிப்பில் உள்ளன.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரிய வகை இனமான மரநாய்கள் சிவப்பு பட்டியலில் உள்ளது. வனப்பகுதியில் எலி, பாம்பு, சிறிய முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடி உண்ணக்கூடியது. மன்னார்குடி வனப்பகுதியில் 3 குட்டிகளை ஈன்ற மர நாய் உயிரிழந்துவிட்டது. மரநாய் குட்டிகளை வனத்துறையினர் மீட்டு பராமரித்து வந்தனர். தற்போது, இவை சேலம் குரும்பப்பட்டி பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x