Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

11 ஆண்டுகளாக ஊதிய உயர்வில்லை; நடமாடும் மருத்துவமனை உதவியாளர்கள் வேதனை: அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் செயல்படும் நடமாடும் மருத்துவமனைகளில் பணியாற்றும் உதவியாளர்களுக்கு, 11 ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படாததால் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஒரு நடமாடும் மருத்துவக் குழு செயல்படுகிறது.

மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் அடங்கிய இக்குழுவினருக்கு வேன் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு, அத்தாணி, புன்செய் புளியம்பட்டி, நம்பியூர், தாளவாடி, குருவரெட்டியூர், மொடக்குறிச்சி, ஜம்பை, சிறுவலூர், உக்கரம், பவானி, டிஎன் பாளையம், அம்மாபேட்டை ஆகிய 14 அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவக் குழு இயங்கி வருகிறது.

இவ்வகை நடமாடும் மருத்துவமனை வேன்களில் அவசரகால சிகிச்சை அடிப்படை ஆய்வக வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடமாடும் மருத்துவக் குழுவினர், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் நேரடியாக சென்று மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்றனர்.

நீரழிவு நோய்சர்க்கரை நோய்க்கான பரிசோதனையை மேற்கொண்டு மருந்து வழங்குகின்றனர். இதற்காக அந்தந்த வட்டாரங்களில் குறைந்தபட்சம் 40 முகாம்கள் நடத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கரோனா, டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று பாதிப்பு மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நடமாடும் மருத்துமனை வாகனங்களில் கடந்த 2009-ம் ஆண்டு, மாநிலம் முழுவதும் 350 மருத்துவ உதவியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். பணியமர்த்தப்படும் போது ஓரிரு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 11 ஆண்டுகள் ஆகியும், இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பணியில் சேர்ந்தபோது வழங்கப்பட்ட ரூ. 7,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக நடமாடும் மருத்துவமனை உதவியாளர்கள் கூறியதாவது:

கடந்த 11 ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வோ, பணி நிரந்தரமோ செய்யப்படவில்லை. விடுமுறை தினங்களில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. எங்களுக்கு மாதம் ரூ 15 ஆயிரம் அடிப்படை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x