

புதுடெல்லி: மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக அவரது தாயாரும், பிரபல தொழிலதிபருமான இந்திராணி முகர்ஜி கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தக் கொலையில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக இந்திராணி முகர்ஜியின் முன்னாள் கணவர் பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டார். சொத்துப் பிரச்சினையில் இந்தக் கொலை நடந்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, சிபிஐ இயக்குநருக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், ‘‘ கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் எனது மகள் ஷீனா போரா உயிருடன் இருக்கிறார். அவரை காஷ்மீரில் பார்த்ததாக பெண் கைதி ஒருவர் என்னிடம் கூறினார். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
எனினும், இது, வழக்கை திசை மாற்றுவதற்கான நடவடிக்கை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.