

புதுடெல்லி: ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பி.பி.கபூர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மக்கள் பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு நகர் மாவட்ட போலீஸ் தலைமையகம் அளித்த பதிலில், ‘‘காஷ்மீரில் கடந்த 31 ஆண்டுகளில் பொதுமக்கள் 1,724 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இவர்களில் 89 பேர் காஷ்மீர் பண்டிட்கள். மீதி பேர் முஸ்லிம் உள்ளிட்ட மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு கேள்விக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆணையர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதிலில், ‘‘1990-ம் ஆண்டில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து தீவிரவாதத்துக்கு பயந்து 1.35 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர். 18,735 முஸ்லிம்கள் வெளியேறி விட்டனர். 54,000 இந்துக்கள். காஷ்மீரில் இருந்து வெளியேறிய தனிப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்கள் மறுவாழ்வு ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளாததால் அவர்களை கண்டறிய முடியவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது