லக்கிம்பூர் கெரி கலவர விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் - மக்களவை ஒரு நாள் முழுவதும் ஒத்திவைப்பு :

லக்கிம்பூர் கெரி கலவர விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால்  -  மக்களவை ஒரு நாள் முழுவதும் ஒத்திவைப்பு :
Updated on
1 min read

உ.பி.யின் லக்கிம்பூர் கெரி கலவரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒரு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வேகமாக வந்த கார் மோதி 4 விவசாயிகள், பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்தனர். அதன் பிறகு ஏற்பட்ட கலவரத்தில் பாஜக தொண்டர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய காரில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா வந்தார். அவர் வேண்டுமென்றே விவசாயிகள் மீது காரை மோதினார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

அதன்பின்னர் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆசிஷ் மிஸ்ரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், லக்கிம்பூர் கெரி கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், ‘‘லக்கிம்பூர் கெரியில் முன்கூட்டியே திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த விபத்து அலட்சியத்தால் ஏற்பட்டது அல்ல’’ என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியது. அப்போது, லக்கிம்பூர் கெரி வழக்கில் சிறப்பு விசாரணை குழு அளித்த அறிக்கை குறித்து விவாதம் நடத்த வேண்டும். அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று கோரி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். மேலும், இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, மத்திய அரசுக்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். அதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த ராஜேந்திர அகர்வால், உறுப்பினர்களை அவரவர் இருக்கைகளில் அமர கேட்டுக் கொண்டார். மேலும், திட்டமிட்டபடி விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த அழைப்பு விடுத்தார். அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். அதனால் பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் அவை கூடிய போதும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதனால் மக்களவை நேற்று ஒரு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ராகுல் நோட்டீஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in