Published : 14 Dec 2021 03:07 AM
Last Updated : 14 Dec 2021 03:07 AM

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கேள்வித் தாளில்பெண் சுதந்திரத்துக்கு எதிரான கருத்து : மத்திய அரசு மன்னிப்பு கேட்க சோனியா கோரிக்கை

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு கேள்வித் தாளில் பெண் சுதந்திரத்துக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ளதற்கு மத்திய அரசு மன்னிப்புக் கேட்க காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கான கேள்வித் தாளில், கணவரின் பேச்சைக் கேட்டு மனைவி நடந்தால்தான் அந்தப் பெண்ணின் குழந்தையும் தாய்க்கு கீழ்படியும் என்றும் பணியாளர்களும் கீழ்படிவார்கள் என்றும் பெண்களுக்கான சுதந்திரம் குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிடுகிறது என்றும் பெண் சுதந்திரத்துக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு கேள்வித்தாளில் இடம்பெற்றுள்ள மிகவும் பிற்போக்கான கருத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். பெண் விடுதலைக்கும் சுதந்திரத்துக்கும் எதிரான கருத்துக்கள் கேள்வித் தாளில் இடம் பெற்றுள்ளன.

மேலும், சர்ச்சைக்குரிய குறிப்பிட்ட அந்த பத்தியில் பெண்கள் மீதான வெறுப்பை உமிழும் முட்டாள்தனமான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. பெண் வெறுப்பாளர்களின் இது போன்ற கருத்துக்களுக்கு எதிராக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். நமது கல்வியின் தரம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை இந்தக் கேள்வித்தாள் காட்டுகிறது. உடனடியாக அந்தக் கேள்வியை திரும்பப் பெறுவதுடன் மத்திய அரசு மன்னிப்புக் கோர வேண்டும். இந்த தவறு மீண்டும் நடக்காதவாறு முழுமையாக விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார். பின்னர், காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x